பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
"இந்தியா பழி போடுகிறது, ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்.
நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம், இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.
பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சிந்து நதி நீர் நிறுத்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள பாகிஸ்தான் அமைச்சர் அவைய்ஸ் லகாரி, “இந்தியாவின் செயல் சட்டவிரோதமானது என்றும், இந்த நடவடிக்கை தண்ணீர் யுத்தத்திற்கு தூண்டுவதாகவும்” கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா தங்களுடைய சொந்த பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதாகவும், பயங்கரவாத சம்பவத்திற்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டும் இந்தியா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும், இந்தியா வெளியிட்ட அறிவிப்புகள் பொறுப்பற்றவை மற்றும் பொருத்தமற்றவை எனவும் பாகிஸ்தான் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.